சென்னை மண்ணில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றை திரைப்படமாகக் கற்பனை கலந்து சொன்ன படங்கள் சிலவையே மட்டுமே உள்ளன. சொல்லப்படாத கதைகள் இன்னும் பல உள்ளன. இந்தப் படத்தில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஹிட்லருக்கு ஆதரவாக செயல்பட்ட ஜப்பான் நாட்டு வீரர்கள் சென்னை மீது குண்டு வீசியதை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. “The Old Man And The Sea” மற்றும் “12 Angry Men” ஆகியவற்றின் ‘இன்ஸ்பிரேஷன்’ இந்தப் படம் என ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளனர்.
1943ம் ஆண்டு காலகட்டத்தில் ஹிட்லர் ஆதரவுப் படையான ஜப்பான் வீரர்கள் விமானம் மூலம் சென்னை மீது குண்டு போட்ட காலம். அதற்குப் பயந்து திறந்தவெளியில்தான் மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு செயல்பாடுகள் நடக்கின்றன. அப்படி விமானங்கள் ஒரு நாள் பறந்த போது ‘போட்’ வைத்துள்ள மீனவரான யோகிபாபு, அவருடைய பாட்டி, தம்பியுடன் ‘போட்’டில் போக நினைக்கிறார். ஆனால், தம்பி போலீசிடம் சிக்கிக் கொள்ள, உயிருக்குப் பயந்த சிலர் யோகிபாபுவின் ‘போட்’டில் ஏறி விடுகிறார்கள். உயிரைக் காப்பாற்ற கடல் எல்லையைத் தாண்ட நினைக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஆரம்ப சில நிமிடங்களைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் கடலில், ஒரே ஒரு ‘போட்’டில் நடக்கின்றன. அந்தக் காலகட்டத்தை கடற்கரை காட்சிகளில் கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
கதையின் நாயகனாக மீனவராக யோகிபாபு. தன் தம்பியை மீட்க முயற்சித்து தோற்றுப் போனாலும், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சிலரை படகில் ஏற்றிக் கொள்கிறார். அதன்பின் ”மெட்ராஸ் எங்க ஊரு, மத்தவங்க பிழைக்க வந்தவங்க, படகுல இருந்து மூணு பேரு குதிச்சே ஆகணும்,” ஆகியவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். கிளைமாக்சில் யோகியும் அவரது பாட்டி லீலாவும் செய்யும் செயல் நாம் சிறிதும் எதிர்பாராத ஒன்று.
உயிருக்குப் பயந்து படகில் ஏறுபவர்களாக மயிலாப்பூர் பிராமணர் சின்னி ஜெயந்த், அவரது மகள் கௌரி கிஷன், இன்வெஸ்டிகேட்டிவ் அதிகாரி எம்எஸ் பாஸ்கர், பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளி ஷாரா, ராஜஸ்தானைச் சேர்ந்த சேட் சாம்ஸ், கர்ப்பிணியாக இருக்கும் தெலுங்குப் பெண்ணாக மதுமிதா, யோகிபாபு பாட்டியாக கொள்ளபுலி லீலா, ஆங்கிலேய அதிகாரியாக ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம், சிறு சிறு மோதல் என திரைக்கதை நகர்கிறது. கௌரிக்கு யோகிபாபு மீது காதல் வருகிறது என்பதெல்லாம் நம்ப முடியவில்லை.
நடுக்கடலில் படகை வைத்து படமாக்குவது எளிதல்ல. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் உழைப்பு தெரிகிறது. ஆனாலும், கடல் பயணத்தின் சூழல் எப்படியிருக்கும் என்பதை காட்சிகளின் மூலம் பார்வையாளர்களுக்கும் இன்னும் அதிகமாகப் புரிய வைத்திருக்க வேண்டும். கரையோரம் மட்டுமே படகு இருப்பது போன்ற உணர்வுதான் வருகிறது. ஜிப்ரான் தனது இசையமைப்பில் காட்சிகளுக்கு முடிந்தவரை உயிரூட்டியிருக்கிறார்.
காமெடி நடிகர்கள் உள்ளதால் படம் காமெடியாக நகரும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. அனைவருமே சீரியஸாக சண்டை போட்டு வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். சாதி, மதம் பார்க்காமல் அந்தக் காலத்தில் ஒரே எதிரியான ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டை போட்டதை காட்டாமல் தங்களுக்குள் மொழி, சாதி, இனம் ஆகியவற்றை வைத்து தங்களுக்குள் சண்டை போட்ட மக்களைப் பற்றித்தான் அதிகம் பதிவு செய்திருக்கிறார். திரைக்கதையில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல், படத்தில் ‘போட்’ எப்படி சுற்றிச் சுற்றி வருகிறதோ அதே போல நகர்கிறது திரைக்கதை.