பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் ‘மெஸன்ஜர்’. இதில் கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார், இவர் “கன்னிமாடம்”, “யுத்தகாண்டம் பாத்திரகாட்” (மலையாளம்) போன்ற படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.
இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஸ்வரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கியவர் ரமேஷ் இலங்காமணி, இவர் இயக்குனர் காந்தி கிருஷ்ணா மற்றும் பத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபு பக்கர் இசையமைத்துள்ளார்.
படத்தின் குறித்து இயக்குனர் ரமேஷ் இலங்காமணி கூறும்போது, “ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீராம் கார்த்திக் காதலில் தோல்வியடைந்ததால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூல் மெசன்ஜரில் உள்ள ஒரு பெண் மெசேஜ் அனுப்பி, தற்கொலை எண்ணத்தை தடுக்கிறார். அவர் தற்கொலை செய்யப்போகும் விஷயத்தை எப்படி தெரிந்துகொண்டார் என கேட்கும் போது, அவர் தன்னுடைய மரணத்தை பற்றி கூறுகிறார். இறந்து விட்ட பெண்ணின் உதவியால் ஸ்ரீராம் கார்த்திக்கின் வாழ்க்கை எப்படி மாற்றப்படுகிறது என்பதே கதை. பேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் உருவாக்கியுள்ளோம்,” என்றார். இது ஒரு பேஸ்புக் பேய் கதையாகும்.