‘காஞ்சனா’ படங்களுக்குப் பிறகு இயக்கத்துக்கு இடைவெளி கொடுத்து, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். சத்யஜோதி தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘ஹண்டர்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். விஷாலுடன் ‘அயோக்யா’ படத்தை இயக்கியவர் இப்போதிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ மற்றும் கார்த்தியின் ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதித் தயாரித்தவர் லோகேஷ் கனகராஜ்.
இதற்கு பிறகு, ‘கருடன்’ துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் திரைக்கதையில் ‘அதிகாரம்’, ராகவா லாரன்ஸின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘துர்கா’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் மற்றும் ராகவா லாரன்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் என்ன என்பதற்கான தகவல்கள் பின்வருமாறு:
கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்கள் வெளியானது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள் ‘ஹண்டர்’ மற்றும் ‘பென்ஸ்’ என்பதால், இரு படங்களின் கதையும் தயாராக இருப்பதால் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. இதில் ‘ஹண்டர்’ படப்பிடிப்பே முதலில் தொடங்குகிறது.
வெற்றிமாறன் திரைக்கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் ‘அதிகாரம்’ படத்தை ‘கருடன்’ படத்திற்கு முன்னரே அறிவித்தார்கள்.அந்தப் படத்தில் நடிப்பது குறித்து லாரன்ஸ், “வெற்றிமாறன் சார் எழுதிய ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதை கேட்டு பிரமித்துப் போனேன். அவரின் பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி” என்று ட்விட்டரில் பதிவிட்டார். துரை செந்தில்குமார் தற்போது லெஜண்ட் சரவணாவுடன் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதற்குப் பிறகு நயன்தாரா படத்தை இயக்கவுள்ளார் எனப் பேசப்படுகிறது.
‘ஹண்டர்’, ‘பென்ஸ்’ படங்களை முடித்த பிறகு மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த உள்ளார் லாரன்ஸ். ‘காஞ்சனா’ தொடரின் அடுத்தப் படமான ‘துர்கா’வின் அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிப்பும் இந்த ஆண்டே தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் நட்புக்காக சிறிய வேடத்தில் நடிக்கிறார்.
‘துர்கா’விற்கு பிறகு தனது தம்பி எல்வின் நடிக்கும் ‘புல்லட்’ படத்தையும் தயாரித்து வருகிறார். எல்வின் நடிப்பைப் பாராட்டி, அவருக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு படம் உருவாக்கவுள்ளார். இதில் அவர் மாற்றுத்திறனாளியாக நடிப்பதுடன், படத்தின் வருமானத்தை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டமிடப்பட்டுள்ளார்.