காட்டின் அரசனாக விளங்கும் சிங்கத்தை மையமாகக் கொண்டு இதுவரை இரண்டு “லைன் கிங்” படங்கள் வெளியாகி உள்ளன. ஒன்று 1994ஆம் ஆண்டிலும், மற்றொன்று 2019ஆம் ஆண்டிலும் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் ஒரே கதையைக் கொண்டவை. 1994ஆம் ஆண்டு வெளிவந்த படம் கார்டூன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாயிருக்க, 2019ஆம் ஆண்டு வெளியான படம் புதிய அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
“லைன் கிங்” படத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்குகளுக்கும் காட்டும் காட்சி, சமூக வலைத்தளங்களில் இன்றும் பரவலாக பகிரப்படும் காட்சியாகத் திகழ்கிறது. படத்தில் பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம், காதல், தலைமை போன்ற அனைத்து குணாதிசயங்களும் காட்டு விலங்குகளின் மூலம் எளிதாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மற்றொரு பாகமான ‘முபாசா: தி லயன் கிங்’ விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இந்தி பதிப்புக்காக ஷாருக்கான், தனது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர், அற்புதமான சகாப்தத்தைக் கொண்டு, வனத்தின் அசைக்க முடியாத அரசனாகத் திகழ்ந்த முபாசா தனது கிரீடத்தை மகனான சிம்பாவுக்குக் கைமாற்றி கொடுக்கிறார். ஒரு தந்தையாக, முபாசாவுடன் என்னை ஆழமாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. டிஸ்னியுடன் இதற்காக இணைவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது மகன்களான ஆர்யனும் ஆப்ரானும் இந்தப் பயணத்தில் எனக்கு இணையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாகும். அவர்களுடன் சேர்ந்து டிஸ்னிக்காக பணிபுரிவது எனக்கான அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.