சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் உருவான படம் ‘கொட்டுக்காளி’. இந்த படத்தை ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் வரவிருக்கும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதை முன்னிட்டு, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது வெற்றிமாறன் பேசுகையில், “வினோத் ஒரு சிறப்பான இயக்குநர். இளம் தலைமுறையில், சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருந்து வருகிறார். மற்ற இயக்குநர்களும் இருக்கின்றனர், ஆனால் வினோத்தின் இருப்பிடம் வணிகரீதியாகவும் திகழ்கிறது. இதற்கு சிவகார்த்திகேயனின் ஆதரவும், சூரி போன்ற பிரபல நடிகர் நடிப்பும் காரணம். அதே சமயம், சூரி போன்ற நடிகர் இப்படத்தில் தானாகவே சேர்ந்தது, படத்திற்குப் பெரும் பலமாகவும், சவாலாகவும் இருந்திருக்கும்.
வாழ்க்கையை நெருங்கிய வகையில் ஒரு படம் செய்யும் போது, வணிகரீதியான கலைஞர்களுடன் இணைந்து, அவருக்கு பிடித்த படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாகும். வினோத் இதுவரை இரண்டு படங்கள் எடுத்துள்ளார், இரண்டுமே சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட படங்களாக இருந்தன” என்று தெரிவித்தார்.