ரீ ரிலீஸ் தற்போது திரையரங்குகளில் டிரெண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் கோலிவுட்டில் விஜய்யின் “கில்லி,” சூர்யாவின் “வாரணம் ஆயிரம்,” தனுஷின் “3” ஆகிய படங்கள் ரீ ரிலீஸாகி மாஸ் காட்டின. தற்போது பாலிவுட்டும் ரீ-ரிலீஸில் மாஸ் காட்டவுள்ளது. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் ரீ ரிலீஸாகியுள்ளன.
இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் “கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்,” “தும்பட்,” மாதவனின் “ரெக்னா ஹாய் தேரா தில் மெய்ன்” ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் திரைக்கு வந்துள்ளன. பாலிவுட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான இந்தப் படங்களை திரையில் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி 2012ஆம் ஆண்டு வெளியான “கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்” திரைப்படம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்த இரண்டு பாகங்களும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பின்னர், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்தியில் வெளியான “ரெக்னா ஹாய் தேரா தில் மெய்ன்” திரைப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸாகியுள்ளது. இது தமிழில் வெளியான “மின்னலே” திரைப்படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் இன்றும் முக்கியமான ஹாரர் திரைப்படங்களில் ஒன்றாக பேசப்படும் “தும்பட்” திரைப்படம் இந்த வாரம் வெளியான ரீ ரிலீஸ்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும், டோலிவுட்டிலும் இந்த வாரம் சில திரைப்படங்கள் ரீ ரிலிஸாகியுள்ளன. நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 1989ல் வெளியான “ஷிவா” திரைப்படமும், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான “மாஸ்” திரைப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸாகியுள்ளன.