நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் “கூலி” படத்தில் இணைத்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா. “கூலி” படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரஜினிகாந்தின் 171வது படம் “கூலி”. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. நாகர்ஜுனா “சிமோன்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கைதி படத்தில் இருந்தே உங்களுடன் (லோகேஷ் கனகராஜ்) பணியாற்ற வேண்டும் எனக் காத்திருந்தேன். “கூலி” படத்தில் என்னை இணைத்ததற்கு நன்றி, லோகி. புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளேன். தலைவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.