இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேட்டையன்” படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் இன்று தொடங்கியுள்ளார். “ஜெயிலர்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் “வேட்டையன்” படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இதே நேரத்தில், “அசுரன்” மற்றும் “துணிவு” போன்ற படங்களில் நடித்த மஞ்சுவாரியர், இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். ரஜினிகாந்த், “கூலி” படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அந்த படத்தின் ஓய்வு நேரங்களில் “வேட்டையன்” படத்திற்கு டப்பிங் பேசுவார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. இதை ஒட்டி, ரஜினிகாந்த் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி “வேட்டையன்” படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
“ஜெய் பீம்” திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால், அதே போலவே “வேட்டையன்” படமும் இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “கங்குவா” திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட் திரையுலகில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவர இருக்கின்றன. ஆனால், “கங்குவா” திரைப்படம் தள்ளிச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.