மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, ஒருவழியாக நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மீதமுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் இந்த வருடமே வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜூன், சைமா விருது வழங்கும் விழாவில் பேசியபோது, “விடாமுயற்சி” படம் டிசம்பர் மாதத்தில் வெளியாவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் “குட் பேட் அக்லி” படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவின் அறிவிப்புகள் உறுதிப்படுத்தி வருகின்றன. எனினும், “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாவா என்ற சந்தேகம் உள்ளது.
“குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக திரிஷா மீண்டும் இணைந்துள்ள நிலையில், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், இந்தப் படத்தின் வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” மற்றும் “மாஸ்டர்” படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். விரைவில் படக்குழு ஸ்பெயினுக்கு செல்லவுள்ள நிலையில், அந்த படப்பிடிப்பிலும் அவர் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.