லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி, இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் வெளியீடு ஆகும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படம் எப்போது வெளியாகும் என்பதில் கேள்விகள் எழுந்தன. அக்டோபர் 31ம் தேதியில்தான் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும், அல்லது அக்டோபர் 10ம் தேதியில்தான் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரஜினிகாந்த் ரசிகர்களும் இருந்தனர்.
அக்டோபர் 10ம் தேதி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். அந்தப் படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியானது. ‘கங்குவா’ ஒரு பான் இந்தியா படமாக வெளியிடப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று உறுதியாகியுள்ளது. இதனால், ‘கங்குவா’ அதே நாளில் வெளியாவதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் படம் வெளியாகும் என்பதால், அதிகமான தியேட்டர்கள் அதற்கு முன்னுரிமை கொடுக்க முன்வருவார்கள். இதனால், ‘கங்குவா’ படத்திற்கு குறைவான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இரண்டு படங்களுமே பான் இந்தியா வெளியீடாக, தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்பதால், அந்தந்த மாநிலங்களில் போதுமான தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்.
கன்னடத்தில், துருவா சர்ஜா நடிக்கும் ‘மார்ட்டின்’ படத்தை பான் இந்தியா படமாக அக்டோபர் 11ம் தேதி வெளியிட உள்ளனர். எனவே, கர்நாடகாவில், ‘மார்ட்டின்’ படத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும். ஹிந்தியில், ஆலியா பட் நடிக்கும் ‘ஜிக்ரா’, ராஜ்குமார் ராவ் நடிக்கும் ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’, ஹிமேஷ் ரேஷமய்யா நடிக்கும் ‘படாஸ் ரவிக்குமார்’ ஆகிய படங்கள் அக்டோபர் 11ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இத்தனை போட்டிகளுக்கு நடுவில், ‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய இரு படங்களுக்கும் ஒரே நாளில் போதுமான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்குமா என்ற கேள்வி திரையுலகத்தில் எழுந்துள்ளது.