இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன் லால். அவருக்கென்று தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மோகன் லால் தமிழில் “இருவர்” படத்தில் நடித்தார். அதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. அதேபோல் மம்மூட்டியும் தமிழில் “தளபதி” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது அவருக்கும் ரசிகர்கள் இங்கு இருக்கின்றனர். ஆனால் மோகன் லாலையும், மம்மூட்டியையும் விட தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் தான் எனலாம்.
அதற்கு முக்கியமான காரணம் ஃபகத்தின் அலட்டல் இல்லாத நடிப்பு. மோகன் லால், மம்மூட்டி ஆகியோரிடமும் இது இருந்தாலும், அவர்களைவிட ஃபகத்தை தமிழ்நாட்டில் ஒருபடி மேலே ரசிக்கிறார்கள். உதாரணமாக அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான “மாமன்னன்” படத்தை எடுத்துக்கொண்டால் புரிந்துகொள்ளலாம். அந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ஃபகத்தின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கும். முக்கியமாக வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் “புஷ்பா” படத்திலும் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் “புஷ்பா 2” படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ஃபகத் பாசிலின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சல்மான் கானை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் “சிக்கந்தர்” படத்தில் ஃபகத் பாசிலை முக்கியமான ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த பேச்சுவார்த்தையில் ஃபகத் ஓகே சொல்லிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.