மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு, நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்தார். தற்போது, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படம் வரவிருக்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனால், மாளவிகா மோகனன் படத்தின் புரொமோஷன் பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், நேற்று, நடிகை மாளவிகா மோகனன் எக்ஸ் தளத்தில், ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அதில், ஒரு ரசிகர், “உங்களுக்கு யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபோது, மாளவிகா மோகனன், பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாகக் கூறியுள்ளார்.