நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் ‘போட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ‘மண்ணாங்கட்டி’, ‘வானவன்’ மற்றும் ‘ஜோரா கைய தட்டுங்க’ போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதற்கிடையில், 2022-ம் ஆண்டு யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் இணைந்து மனிதநேயம் மற்றும் இயற்கையை பற்றி கூறும் ஒரு கிராமப்புற படத்தில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளி வெங்கட், சிங்கம்புலி, ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் லட்சுமி மேனன் நகரத்திலிருந்து கிராமத்துக்குச் செல்லும் மருத்துவராக நடித்துள்ளார். யோகி பாபு வேட்டைக்காரனாகவும், நடிகர் காளி வெங்கட் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தினை இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோரின் உதவியாளரான அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படக்குழுவினர் இது குறித்த அப்டேட்டை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.