நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘குரங்கு பொம்மை’ இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்தது ‘மகாராஜா’ படம். இது அவரது 50வது படம். இப்படத்தின் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், படம் வெளியான பிறகு, மிகுந்த வரவேற்பும் வெற்றியும் பெற்று, நேற்று வரை 32 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டிலும் கலந்து கொண்டார். இதற்கு முன், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சிகளிலும் விஜய் சேதுபதி சிறப்பாக கலந்து கொண்டார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ‘மகாராஜா’ படக் குழுவினரான நட்ராஜ், அபிராமி மணிகண்டன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். பிரியங்கா தொகுத்து வழங்கிய ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம் பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, உடனிருந்த நடிகர் நட்டி நடராஜ், விஜய் சேதுபதி தற்போது இசை கற்றுக்கொண்டு வருவதாக ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தினார். இதை ஒப்புக்கொண்டு விஜய் சேதுபதியும், தான் தற்போது இசையை கற்றுக்கொள்வதாக கூறினார். மேலும் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், விஜய் சேதுபதி இந்த வயதிலும் இசை கற்றுக் கொள்ள துவங்கியுள்ளார். சினிமாவில் நடிக்க துவங்குவதற்கு முன், விஜய் சேதுபதியின் வாழ்க்கை அவ்வளவு இனிதாக இல்லாமல் இருந்ததை பற்றி அவர் பல பேட்டிகளில் கூறியது குறிப்பிடத்தக்கது.