செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான போது பெரிதும் கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்போது அப்படத்தையும் அப்பட பாடல்களையும் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/09/1000067577.jpg)
அதில்,நிறைய பேர், எத்தனையோ முறை என்னை ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பேச சொல்லி இருக்கிறார்கள். எனக்கென்னவோ பேசவே தோன்றவில்லை. ஏனென்றால் அந்த படம் கொடுத்த ரணங்கள், மனசு முழுக்க காயங்கள், தழும்புகள் அது என்றைக்கும் வலிச்சிட்டு தான் இருக்கும். பேச தோணல. அவ்ளோ வலி யாரும் அனுபவிச்சு இருக்க மாட்டாங்க. ஆயிரத்தில் ஒருவன் படம் ஆரம்பிக்கும் போது ஒரு புது அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என நினைத்தேன்.
போஸ்ட் ப்ரொடக்ஷனில் VFX காட்சிகள் முடிக்க ராத்திரி பகலாக கஷ்டப்பட்டோம். எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறோம். ஒரு வருடம் படத்தை எடுத்து முடித்து விட்டோம்.படம் ரிலீஸ் ஆன பிறகு ஒவ்வொருவரும் படத்தை குத்தி குத்தி கிழிச்சாங்க. இவன் யாரு இப்படி எடுக்க என போஸ்டர் ஒட்டினார்கள். தெலுங்கில் கொஞ்சம் நன்றாக ஓடியது ஆறுதலாக இருந்தது. எனக்கு தேவையில்லை, ஆனால் படத்தில் உழைத்த கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மற்றும் டெக்னிஷியன்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விட்டதே என வருத்தமாக இருந்தது. அதற்காக இன்னைக்கு வரைக்கும் அழுதுகிட்டுதான் இருக்கேன் என்றுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.