சூர்யாவின் பிறந்த நாள் இம்மாதம் வருகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகவிருக்கிறது. மேலும், விக்ரமின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ வெளியானதை போன்று சூர்யாவிற்கு ‘கங்குவா’ மேக்கிங் வீடியோவும் வெளிவரக் காத்திருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு முன்பே சூர்யாவுக்கென இந்தக் கதையை ரெடி செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ (Kecha Khamphakdee) சூர்யாவின் உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுடன், ‘கங்குவா’வை காண ஆவலாக இருப்பதாகப் பாராட்டியுள்ளார். ஏகப்பட்ட ஃபைட்டர்களுடன் சூர்யா மோதும் காட்சிகள் அசரடிக்க வைக்கும் என்று கூறுகின்றனர். இந்த ஸ்டன்ட் மாஸ்டர் முருகதாஸின் ‘துப்பாக்கி’, அட்லியின் ‘ஜவான்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.
அந்தமானில் முதற்கட்ட ஷெட்யூலாக 30 நாட்கள் திட்டமிடப்பட்டது. அதன்படி அங்கே முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. சூர்யாவின் பகுதி ஜூன் 5-ந்தேதியோடு முடிவடைந்தது. மற்றவர்களின் பகுதி இன்னும் சில நாட்கள் நீடிக்கின்றது. இந்த ஷெட்யூலோடு சென்னை திரும்பும் படக்குழு, சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ஊட்டி கிளம்புகிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள ‘சூர்யா 44’ படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாள் சிறப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.