நடிகர் அஜித், தனது நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸிங் போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை முடித்த பிறகு, கார் ரேஸிங்கில் பங்கேற்க துபாய் சென்றுள்ளார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பே “அஜித்குமார் ரேஸிங்” என்ற தனிப்பட்ட கார் ரேஸிங் அணியை தொடங்கி, அதற்கான பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, துபாயில் தனது அணியுடன் முழு நேர பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த நேரத்தில், அடுத்த 9 மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை எனவும், கார் ரேஸிங்கில் சாதிக்க விரும்புவதாகவும் அவர் அறிவித்தார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மாலை துபாயில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், துபாய் ரேஸ் வளாகத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில், அவர், நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதில் ஒன்று (விடாமுயற்சி) படம் ஜனவரி மாதம், மற்றொன்று ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவித்தார். அங்கு திரண்டு வந்திருந்த ரசிகர்களை பார்த்து, நான் உங்களை எல்லையின்றி நேசிக்கிறேன்” என்று உருக்கமாக கூறினார். இந்நிலையில் “விடாமுயற்சி” படம் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.