பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். இந்த படம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில், இந்திரா காந்தியாக கங்கனா நடித்துள்ளார்.
இந்திரா காந்தியை சர்வாதிகாரியாக சித்தரித்ததாகவும், அவரைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் படம் வெளியான தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.இந்த சூழலில், கங்கனா ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வருகிற 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்களை சமாதானப்படுத்துவதற்காக அவர்களை நேர்முகமாக சந்தித்து வருகிறார். ஒருகாலத்தில் இந்திரா காந்தியை கடுமையாக விமர்சித்திருந்த கங்கனா, இப்போது அவரைப் பற்றி புகழ்ந்து பேச தொடங்கியுள்ளார். அதோடு, காங்கிரஸ் உறுப்பினர்கள், குறிப்பாக பிரியங்கா காந்தியை இந்தப் படத்தை பார்க்க அழைத்துள்ளார்.
இதுகுறித்து கங்கனா கூறியதாவது: “பார்லிமென்டில் நான் பிரியங்கா காந்தியை சந்தித்தேன். அப்போது முதலில் நான் அவரிடம் ‘நீங்கள் எமர்ஜென்சி திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு அவர் மிகவும் கனிவுடன் ‘நிச்சயம் பார்க்கிறேன்’ என்றார். மேலும், நான் மீண்டும் ‘நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்கும்’ என்று கூறினேன்.
இந்திரா காந்தியை திரையில் கண்ணியமாக சித்தரிப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டேன். ஏனெனில், அவரும் ஒரு மிகவும் விரும்பப்பட்ட தலைவர். அவசரநிலையின் போது நடந்த சில பிரச்சனைகளைத் தவிர, அவர் மக்களால் ஏற்கப்பட்ட மற்றும் கொண்டாடப்பட்ட தலைவர். மூன்று முறை பிரதமராக இருந்தது சாதாரணம் அல்ல,” என்றுள்ளார் கங்கனா.