இளைய திலகம் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல நடிகர் பிரபு, 1980களில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி வருகிறார். தற்போதில், கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தில், நடன இயக்குநர் சதீஷின் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இதனிடையே, ‘ராஜபுத்திரன்’ என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றிக்கு தந்தையாக அவர் நடித்துள்ளார். அவருடன் இணைந்து கிருஷ்ண பிரியா, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மகா கந்தன் இயக்கிய இந்த படம், கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் மே 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் ‘ராஜபுத்திரன்’ படத்தின் டீசர் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.