மோகன் குருசெல்வா இயக்கத்தில் தர்ஷன் நடிக்கும் ‘காட்ஸ் ஜில்லா’ படம் உருவாகி வருகிறது. இது ரஜினிகாந்த் நடித்த ‘அதிசய பிறவி’ பாணியில் பேண்டசி ஜானரில் உருவாகும் படமாகும். இதுகுறித்து தர்ஷன் கூறுகையில், “நான் நடித்த ‘நாடு’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு நடித்த ‘சரண்டர்’ படம் ஓடிடியில் ஹிட்டானது.

இதனால் மக்கள் விரும்பும் ஜனரஞ்சக கதையில் நடிக்க வேண்டும் என்று எண்ணியபோது இந்த கதை கிடைத்தது. இது ரொமான்டிக் காமெடி படமாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘அதிசய பிறவி’ மாதிரி பேண்டசி அம்சங்களும், கிராபிக்ஸ் காட்சிகளும் அதிகம் இருக்கும். இதில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். என் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் பூஜையும், படப்பிடிப்பும் தொடங்கியது.
‘காட்ஸில்லா’ என்பதற்கும், ‘காட்ஸ் ஜில்லா’ என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அதன் அர்த்தம் விரைவில் தெரியும். புராணக் கற்பனை, நகைச்சுவை, காதலில் தோல்வியுற்ற இளைஞனின் வாழ்க்கையில் தெய்வீக சக்தி ஏற்படுத்தும் தாக்கமே கதையின் மையம்” என்றுள்ளார்.