இயக்குநர் ஏ.எல். விஜய் நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சுவாரசிய சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார்.நடிகர் விஜய் அரசியல் ரூட்டை எடுப்பதற்கு முக்கிய காரணமாக மாறியதே அந்த படம் தான் என்றும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டது. அத்தனை தடைகளையும் தாண்டி தனது படத்தை நடிகர் விஜய் எப்படி வெளியிட்டார் என்பது குறித்து ஏ.எல். விஜய் கூறியுள்ளார்.


ஆரம்பத்தில் தலைவன் என்கிற டைட்டிலை தான் தலைவா படத்துக்கு வைக்க நினைத்தோம். ஆனால் எம்ஜிஆர் படத்தின் டைட்டில் என்பதால், அந்த டைட்டில் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் டைட்டிலை வைக்க முடிவு செய்தோம். அதுதொடர்பாக இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சென்று சந்தித்து பேசினேன். அப்போது, இந்த படம் யூனிக்கான படம் இதற்கு யூனிக்கான டைட்டில் வை, தளபதி டைட்டில் செட்டாகாது என்றார். ஜாம்பவான் இயக்குநர் சொன்னதை ஏற்றுக் கொண்டு என்ன டைட்டில் வைக்கலாம் என யோசித்த போது கடைசியாக தலைவா டைட்டில் லாக் ஆனது என்றார்.

தமிழ்நாட்டைத் தவிர கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தலைவா திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தான் படம் வெளியானது. அந்த 10 நாட்களும் விஜய் எங்களுடனே இருந்தார். தயாரிப்பாளருக்கு அந்தளவுக்கு தைரியம் கொடுத்து, படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடலாம் என அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, படத்தை வெளியிட வைத்தார் என்றார்.