கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை, இயக்குனர்கள் சூர்யகதிர் மற்றும் K.கார்த்திகேயன் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி, ஸ்மிரிதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபிநக்ஷத்ரா, அபிநயா, சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ‘கருடா’ ராமச்சந்திரா, ‘மைம்’ கோபி மற்றும் அனுபமா குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார் பேசியது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில், 175 ஆவது நாள் பட விழாவை இங்கு கொண்டாடிய நினைவு எனக்கு உள்ளது. அப்படியொரு முக்கிய இடத்தில் ஹிட் லிஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தினமும் உடற்பயிற்சி செய்ததே. இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு, குடும்ப விழா போன்றது என்று அவர் குறிப்பிட்டார்.

சரத்குமார் தொடர்ந்து பேசுகையில், “சூரியவம்சம் 2 எடுக்கலாம் என யோசித்தோம், ஆனால் அது சரியாக அமையவில்லை. சூரியவம்சம் 2, 3, 4 எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு 150 வயதான பிறகும் நான் நடிப்பேன்,” என்றார்.

இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் ‘சரத்குமார் 150 வயது வரை வாழ்வார்’ என்று செய்தி வெளியிடுவார்கள். எதுவாக இருந்தாலும், அதை நான் மகிழ்ச்சியாகவே எதிர்கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் பாபா 4 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். புரட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவி இன்றும் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை,” என அவர் பேசியுள்ளார்.