Tuesday, November 19, 2024

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் எப்படி இருக்கு ? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நட்பு, காதல் இவற்றை மையப்படுத்திய படங்கள்தான் இளம் ரசிகர்களைக் கவரக் கூடிய படங்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நட்பையும், காதலையும் காலத்திற்கேற்றபடி பயன்படுத்திக் கொண்ட படங்கள் நிறைய உண்டு. இந்தப் படம் ஒரு இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தை நட்பு, காதல் ஆகியவற்றுடன் சேர்த்து சொல்லியிருக்கும் படம். அறிமுக இயக்குனர் அனந்த், இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.ஒரு இலக்கு இருக்கிறது, ஆனால், அதை அடைய வழி தெரியாமல் தவிக்கும் ஒரு இளைஞன் எப்படி அந்த இலக்கை அடைகிறான் என்பதுதான் படத்தின் கதை.

ஆனந்தம் காலனி என்ற பகுதிக்கு சிறு வயதில் குடி வருகிறது அனந்த் குடும்பம். அந்தக் காலனியில் உள்ள தன் வயது சிறுவர்கள், சிறுமியருடன் நட்பாகிறார் அனந்த். அது கல்லூரிப் பருவத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இஞ்சினியரிங் முடித்ததும் நண்பர்களாகச் சேர்ந்து ஒரு ‘ஈவன்ட்’ கம்பெனியை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அது சரியாக நடக்காமல் தோல்வியடைகிறது. பின்னர் அப்பா ஆலோசனையின்படி சிங்கப்பூருக்கு மேற்படிப்புக்காகப் போகிறார் அனந்த். அவருடைய லட்சியமாக ‘பிகம் எ பிரண்ட்’ என்ற மொபைல் ஆப் திட்டம் ஒன்றை செயல்படுத்த முயற்சிக்கிறார். இவற்றோடு பழைய நட்பில் பிரிவு, புதிய நட்புக்கள், காதல் என போகிறது அவரது வாழ்க்கை. அவரது லட்சியத்தை அடைந்தாரா, நட்பும், காதலும் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நண்பர்கள் படை சூழத்தான் படம் ஆரம்பமாகிறது, நண்பர்களுடனேயே நகர்கிறது, நண்பர்களுடனேயே முடிகிறது. இப்படத்தை ஒரு ‘மோட்டிவேஷனல் மூவி’ என தாராளமாகச் சொல்லலாம். நண்பர்களால் தங்களது வாழ்க்கையில் உயர்வு ஏற்பட்டவர்களுக்கு இது புரியும். எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே நம் லட்சியத்தை அடைய தூண்டுகோலாக இருப்பார்கள்.இதற்கு முன்பு ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அனந்த். இந்தப் படத்தில் தன்னை ஹீரோவாகவும், இயக்குனராகவும் உயர்த்திக் கொண்டுள்ளார். அப்படி அவர் மாறுவதற்கும் யாரோ ஒரு நண்பர் தூண்டுகோலாக இருந்திருப்பார். எமோஷனலான ஒரு கதாபாத்திரம். படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் ஒரு வெறுப்பைக் காட்டுவார்கள். மற்ற நண்பர்கள் வேலைக்குப் போய்விட்டு நாம் மட்டும் வேலைக்குப் போகாமல் இருந்தால் அதன் வலி வேறு. நம்மை நன்றாகப் புரிந்து கொண்ட காதலி, நம்மை விட்டுப் போய்விடுவாரோ என்ற தவிப்பு என படம் முழுவதும் தனது கதாபாத்திரத்தை சரியாகவே ‘ஹேண்டில்’ செய்திருக்கிறார் அனந்த்.

அனந்த்தின் காதலியாக பவானிஸ்ரீ. இஞ்சினியரிங் கல்லூரியில், அனந்த் காலனியில் புதிதாக வந்து சேர்கிறார் பவானி. பார்த்ததுமே காதல் கொள்கிறார் அனந்த். என்ன நடந்தாலும் காதலனுக்கு ஆதரவாகஇருக்கும் ஒரு கதாபாத்திரம், நிறைவாய் நடித்திருக்கிறார். அனந்த்தின் நண்பர்களாக நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் ஆர்ஜே விஜய், சிங்கப்பூரில் நண்பனாக வரும் வினோத் ஆகியோருக்கு படத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உள்ளது. இருவருமே நட்பிற்கு இலக்கணமாய் நடித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஓரிரு காட்சிகளில் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் அனந்த்.

காஷிப் இசையில் பாடல்கள் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கலாம். இருப்பினும் பின்னணி இசையில் குறை வைக்கவில்லை, உணர்வுபூர்வமான காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார். கதைக்கு உண்டான எல்லையை மீறாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார் தமிழ் செல்வன்.முதல் பாதியில் வரும் பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள் தேவையற்று நீளமான காட்சிகளாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியிலும் சில காட்சிகள் அப்படி உள்ளன. சொல்ல வரும் விஷயத்தை கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்லாமல் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில காட்சிகளில் ஒரு நாடகத்தனம் எட்டிப் பார்க்கிறது.

- Advertisement -

Read more

Local News