நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தக் அறக்கட்டளை மூலம் மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.
அவரால் படித்து உயர்ந்த நிலைக்கு வந்த மாணவர்கள், தற்போது ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘மாற்றம்’ என்ற பெயரில் மே 1 முதல் சேவை அமைப்பு மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரன்ஸ் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அவரது ஓவிய திறமையை சமூக வலைதளங்கள் மூலம் கண்டு ரசித்த லாரன்ஸ், அவரை பாராட்ட விரும்பியதாக கூறினார். லாரன்ஸை சந்தித்த அந்த ஓவிய ஆசிரியர் ஒரு சிறப்பு பரிசை அவருக்கு வழங்கினார். அந்த ஓவியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஓவியம் இருந்தது. இதனை மகிழ்ச்சியுடன் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு லாரன்ஸ் அந்த ஓவிய ஆசிரியருக்கு நிதி உதவி வழங்கினார்.