ஜமா நடத்துபவராக நடித்திருக்கும் சேத்தன் அப்படியான வாழ்வியலைப் பார்க்காதவர். ஆனால், இப்படத்திற்காக படப்பிடிப்புக்கு முன்பே அந்த ஊருக்குச் சென்று அவற்றைப் பார்த்து பயின்று ஒரு வாத்தியார் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இப்படியான கதாபாத்திரங்கள் ஒரு நடிகருக்கு எப்போதோ ஒரு முறைதான் கிடைக்கும். அப்படி கிடைத்த அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சேத்தன். வாத்தியாரின் நடிப்புக்கு விருதுகளை தேடி வரலாம்.
பாரியை விரட்டி விரட்டி காதலிப்பவராக அம்மு அபிராமி. தான் ஆசைபட்டபடி படிக்கக் காரணமாக இருந்த பாரியை அவர் காதலிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், படித்த அம்மு தன்னை விட சிறந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விலகியே இருக்கிறார் பாரி. இருந்தாலும் மனதுக்குப் பிடித்தவனை கைபிடிக்கத் துடிக்கிறார் அம்மு. குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவான ஒரு நடிப்பு.

பாரியின் அம்மவாவாக நடித்திருக்கும் மணிமேகலை, அப்பாவாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், ஆதரவாக இருக்கும் சக கலைஞன் வசந்த் மாரிமுத்து ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

தனக்கான ஒரு படம் கிடைத்துவிட்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் தன் இசையைத் தருபவர் இளையராஜா. இந்தப் படத்தில் அவருக்காகவே உருவாக்கப்பட்ட பல உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கின்றன. அவற்றை தன்னுடைய இசையால் இன்னும் உயர்த்திக் காட்டியிருக்கிறார். ‘நீ இருக்கும் உரசத்துல’ பாடல் மென்மையாய் வருடிச் செல்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகொண்டா பட்டு கிராமம், கூத்து நடக்கும் இரவு நேரக் காட்சிகள் ஆகியவற்றை அதன் இயல்புடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோபால் கிருஷ்ணா.இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகளின் நீளம் சற்றே அதிகம். அவற்றை சுருக்கமாய் சொல்லியிருக்கலாம். அதோடு முதல் பாதியில் இருந்த தெளிவான திரைக்கதை அமைப்பு, இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. இப்படியான சில குறைகளைத் தவிர்த்திருக்கலாம்.