‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சில விருதுகளையும் பெற்றது. வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வாறு தனித்துவம் கொண்ட படங்களை உருவாக்குவதற்கும் தைரியம் வேண்டும். இவ்வாறான படங்களை ‘ஆர்ட் பிலிம்’ என்றே பார்க்க பழகி விட்டோம்.உலகளவில் வெளியாகும் திரைப்படங்களில் காணக்கூடிய எளிய ஒரு வரிக் கதை, அதற்கான இயல்பான சம்பவங்களுடன் கூடிய திரைக்கதை, அதன் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள் இவ்வாறான படங்களை வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபடச் செய்கின்றன.
வணிக ரீதியில் உள்ள படங்களில் காணப்படும் வழக்கமான ஒரு கதைதான். ஆனால், இயக்குனர் வினோத்ராஜ் அதை அணுகிய விதம்தான் மாறுபட்டது. மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இளம் பெண் அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பி, அவரை மற்றொரு கிராமத்தில் உள்ள பேய் ஓட்டும் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அன்னாவின் முறை மாமன் சூரி, இருவரது குடும்பத்தினர், சில உறவினர்கள் ஆகியோர் ஒரு ஆட்டோ மற்றும் பைக்கில் பயணம் செய்கிறார்கள். அந்தப் பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள், பேய் ஓட்டும் இடத்திற்குச் சென்ற பின் அன்னாவுக்கு பேய் ஓட்டினார்களா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
அன்னா தனக்கு பிடித்த மாதிரியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்புகிறார். படம் முழுவதும் எங்கேயோ வெறித்துப் பார்க்கும் முகத்துடனேயே இருக்கிறார். இடையில் சில இடங்களில் லேசாக சிரிக்கிறார், கோபப்படுகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் வாய் திறந்து பேசுகிறார். கோபக்கார மாமனாக சூரி. அன்னா மீது அதிக பாசம் வைத்து, அவரை பேய் ஓட்ட அழைத்துச் செல்கிறார், ஆனால் ஒரு இடத்தில் சூரியின் நடத்தை நமக்கு அதிர்ச்சி தருகிறது. எங்கோ ஒலிக்கும் சினிமா பாடலுக்கு அன்னா முணுமுணுக்க ஆரம்பிக்கும்போது, சூரி கோபம் கொண்டு அன்னாவையும், அவரது அம்மா உள்ளிட்ட அனைவரையும் கடுமையாகத் தாக்குகிறார். அப்போதுதான் தெரிகிறது அன்னாவுக்கு உண்மையில் பேய் பிடித்திருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது. சூரி, ஆணாதிக்க குணம் கொண்ட, சாதி வெறியால் அடங்கிய கிராமத்து இளைஞனாக மாறி, நகைச்சுவையில் இருந்து கதையின் நாயகனாக நடிப்பதை ஆச்சரியமாக காட்டுகிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும், இதற்கு முன்பு நாம் பார்த்திராத முகங்களாக இருக்கிறார்கள். யதார்த்தமான நடிப்பை அவர்கள் மிகச்சிறப்பாக அளித்துள்ளனர். கிராமத்து பெண்கள் என்ன பேசுகிறார்கள், இளைஞர்கள் எதன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் படலம் போன்றவை சமூக நிலைகளையும் குறியீடுகளாக காட்டுகின்றன. இயக்குனர், காட்சிகள் வழியே சில பதிவுகளை ரசிகர்கள் கவனிக்கும்படி வடித்துள்ளார். இந்தப் பணியில் ஒளிப்பதிவாளர் சக்திவேலின் உதவியும் பெரிதாக இருந்தது.படத்தில் பின்னணி இசை இல்லாத நிலை தான், இயற்கையின் ஒலி பின்னணி இசையாக அமைந்துள்ளது. இந்த ஒலிப்பதிவை அருமையாக உருவாக்கியுள்ளனர் சவுண்ட் டிசைனர் சுரேன் மற்றும் அழகிய கூத்தன். கிராமங்கள், கிராமத்து மக்கள் இன்னும் எப்படி இருக்கிறார்கள், அவர்களது எண்ணங்கள் தற்காலத்திற்கு ஏற்ப மாறியுள்ளதா இல்லையா என்பதைக் கூறும் படம் இது.