விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை திவ்யபாசுரம் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருத்தண்டி நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.இதற்கிடையில், ஆண்டாள், ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களுடன் இளையராஜாவும் சென்றதாகவும், அப்போது கோவில் பட்டர்களின் அறிவுரைக்கு உடன்படாமல், இளையராஜாவை மட்டும் வெளியே நிறுத்தினார்கள் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்த மண்டபத்தில் மடாதிபதிகள் மற்றும் அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கடமையான கோயில் வழக்கப்படி அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விவகாரத்தைப் பற்றி திருதண்டி ஜீயர், இளையராஜாவிடம் விளக்கமளித்தார். இதன் பின்னர், இளையராஜா அதனை ஏற்றுக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு நின்று தரிசனம் செய்தார் என்று மதுரை மண்டல அறநிலைத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், இளையராஜா தனது எக்ஸ் பதிவில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, அதை விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத நிகழ்வுகளை நடந்ததாக பரப்புகின்றனர். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.