தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த சாய்பல்லவி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் தயாராகும் ராமாயண படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை உள்ளதாம்.


இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் தெலுங்கில் நடித்த பிதா, லவ் ஸ்டோரி, சியாம் சிங்கராய், விராட்ட பருவம், எம்சிஏ போன்ற எந்த படத்தை எடுத்துக் கொண்டாலும், அவை அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்தான். நடனத்தின் மூலமும் எனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்த படங்கள் இவை. ஆனால் நான் இந்த படங்களை எல்லாம் விட வித்தியாசமான, நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.


அந்த படத்தில் எனக்கென்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன்’ என்றார்.