கடந்த பிப்ரவரி மாதத்தில் மலையாளத்தில் “மஞ்சும்மேல் பாய்ஸ்” என்ற திரைப்படம் வெளியானது. சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில் மிகப் பெரிய பிரபல நடிகர்கள் இல்லை, ஆனால் பத்துக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்திருந்தனர். இப்படம் கேரளாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் மொத்தத்தில் 230 கோடி ரூபாய் வசூலித்து, மலையாள சினிமாவில் மிக அதிகம் வசூலித்த திரைப்படமாக பெயரடைந்தது.

கேரளாவில் இருந்து கொடைக்கானல் செல்லும் சில இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் தவறி விழ, அவரை மீட்க மற்ற நண்பர்கள் மேற்கொள்ளும் முயற்சியே இப்படத்தின் கதை. இதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருந்ததால், படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதேபோல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய சில நாட்களிலேயே பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஆனால் ரீமேக் உரிமையை தரப்படவில்லை.

சமீபத்திய பேட்டியில் இதைத் தெளிவுபடுத்திய சிதம்பரம், “இந்தக் கதையில் யுனிவர்சல் சப்ஜெக்ட் உள்ளது. ஆனால் கேரளா மற்றும் தமிழ்நாடு மக்களின் கலாச்சாரங்களை இணைத்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதனை வேறு மொழிகளில் எடுத்தால், அந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கொண்டு செல்ல முடியுமா என்பதில் சந்தேகம். அதேபோல் ரீமேக் செய்தால் இங்கு பெற்ற வெற்றியை அங்கே பெறுவது உறுதியா என்பதிலும் சந்தேகம் உள்ளது. அதனால் ரீமேக் செய்யவில்லை” என்றார்.