நடிகர் விஷால் மதுரை வந்தபோது, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகாமல் ஊருக்குப் போய்விட முடியுமா? அதனால் தான் கோவிலுக்குச் சென்றேன். இல்லையெனில் எங்கள் அம்மா என்னை வீட்டுக்குள் கூட அனுமதிக்க மாட்டார்கள். அம்மா எனக்கு புடவை கொடுத்தார்கள்; அதை அம்மனுக்குப் பரிசாக வழங்கி, சாமி தரிசனம் செய்தேன். 2006-ஆம் ஆண்டு ‘திமிரு’ படப்பிடிப்புக்காக மதுரை வந்திருந்தேன். அதற்குப் பிறகு 19 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் வந்துள்ளேன். மனமார வேண்டிக்கொண்டேன்” என்றார்.

“நடிகர் சங்க கட்டடம் தாமதமாகியதற்குக் காரணம் நான் அல்ல. ஆறு மாதங்களில் கட்டடம் முடிவடைய வேண்டியிருந்த நிலையில், நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியது மற்றும் எண்ணிக்கை விவகாரத்தில் நீதிமன்றம் சென்றதன் காரணமாக, திட்டம் மூன்று ஆண்டுகள் தாமதமானது. இன்னும் நான்கு மாதங்களில் கட்டடம் முழுமையாக முடிந்துவிடும். இந்தியா – பாகிஸ்தான் போர் தேவையற்றது; இதை தவிர்த்திருக்கலாம். நம்மை காக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் எல்லைகள் இருக்கின்றன; அதை புரிந்துகொண்டு செயல்பட்டால் போர்களே நிகழவேண்டிய அவசியமில்லை” என்றார்.
“மதுரை மக்கள் இரண்டு விஷயங்களில் மாறவே மாட்டார்கள். ஒன்று பாசம், மற்றொன்று உணவு. இந்த இரண்டு விஷயங்களிலும் எந்த மாற்றமும் இருக்காது. நூறு ஆண்டுகள் கழிந்தாலும் கூட, அதே அளவிலான பாசமும், அதே சிரிப்பும் அவர்களிடம் இருக்கும்” என்றும் அவர் உருக்கமாக கூறினார்.