திண்டுக்கல் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் சர்கார் (விதார்த்). விவசாயியான அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரின் மூத்த மகன் பள்ளியில் படிக்கும் போதே டாக்டராக வேண்டும் என்ற ஆசை கொண்டவர். அப்போது மத்திய அரசு மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை அறிமுகம் செய்கிறது.
இதனால், தனது மகனின் டாக்டர் கனவை நனவாக்க சர்கார் எப்படிக் கஷ்டப்படுகிறார் என்பதே கதை. நீட் தேர்வால் தமிழக மாணவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் சந்திக்கும் சிரமங்களை இயக்குநர் சுப்புராமன் தெளிவாகக் காட்டியுள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை உணர்த்தியுள்ளார்.
சர்கார் தன் மகனுக்காக போராட, சமூக அக்கறை கொண்ட மாணிக்கம் (ரஹ்மான்) அவருக்கு உதவுகிறார். ஆனால், போலீஸ் அதிகாரியான மாணிக்கம் தனது வேலையை விட்டுவிட்டு சிறுவனுக்காக வழக்கறிஞராக மாறுவது நம்புவதற்குத் தொலைவாக இருக்கிறது.
முதல் பாதியில் அப்பா மகன் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். நீட் தேர்வு எழுத சர்காரின் மகன் ஜெய்பூருக்குச் செல்கிறான், இங்கு இயக்குநர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் ரஹ்மானுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நீதிமன்றத்தில் அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானவையாக உள்ளன.
மகனின் கனவுக்காக தன் ஆசைகளை விட்டுவிட்டு பாடுபடும் தந்தையாக விதார்த் இயல்பாக நடித்துள்ளார். ரஹ்மானின் நடிப்பு பாராட்டுக்குரியது. விதார்தின் மனைவியாக வரும் வாணி போஜனுக்கு பெரிய வேலையில்லாவிட்டாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். விதார்தின் மகனாக நடித்த க்ரித்திக் மோகனின் நடிப்பு சிறப்பாக உள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை இயக்குநர் உணர்த்திய விதத்தை பாராட்ட வேண்டும்.