2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம், ரியோ ராஜ் தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்திலும் நடித்தார். 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோ’ திரைப்படம், அவருக்கு பெரிய பெயரையும் நல்ல வரவேற்பையும் பெற்றுத் தந்தது.
யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பதுடன், திரைப்பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ‘பியார் பிரேம காதல்’, ‘ஹை ஆன் லவ்’, ‘மாமனிதன்’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இதில், ‘பியார் பிரேம காதல்’ தவிர மற்ற படங்கள் பெரிதாக வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை என்றாலும், அனைத்துப் படங்களும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டன.
தற்போது, ரியோ ராஜ், யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் எழுதி இயக்கியுள்ளார். இதில், கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.