இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சிறப்பாக செயல்பட்டது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஷ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை 2 திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விஜய் சேதுபதி. தெலுங்கில் புரமோஷன் செய்தபோது, “நான் தெலுங்கில் சில இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடித்த சைரா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர், சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்ணவ தேஜ் நடிப்பில் வெளியான உப்பெனா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.