தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.
சமீபத்தில் தெலுங்கில் வேட்டையன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஞானவேல் பேசியபோது வேட்டையன் இரண்டாம் பாகம் உருவாகுமா என அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘வேட்டையன்’ 2-ம் பாகம் ஒருவேளை உருவானால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. ஆனால், ஒரு முன்கதையாக (prequel) உருவாக்கினால் நல்லது எனக் கருதுகிறேன். அதியன் எப்படி என்கவுன்ட்டர் அதிகாரியாக மாறினார், ஃபகத் பாசில் திருடனாக இருந்து காவல்துறைக்கு உதவியாக மாறினார் என்பவற்றை மையமாகக் கொண்டு ‘வேட்டையன் 2’ உருவாக்கலாம்” என்று கூறியுள்ளார் தா.செ.ஞானவேல்.
‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு, தா.செ.ஞானவேல் இந்தி மொழியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்குத் ‘தோசா கிங்’ என்று பெயரிட்டுள்ளனர்.