ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றின் அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்களுடன் சேர்த்து 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். இந்த மோசமான தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் தான் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, தாக்குதலாளிகளை கைது செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் மற்றும் இந்தி நடிகை வாணி கபூர் நடித்துள்ள ‘அபிர் குலால்’ திரைப்படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாக இருந்தது. இந்த படம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையை தாண்டும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பவாத் கான் கதாநாயகனாகவும், வாணி கபூர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அதேபோல் சோனி ரஸ்தான், பரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் நடிகர் பவாத் கானின் ‘அபிர் குலால்’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, இந்தியாவில் அந்த படம் வெளியிட அனுமதிக்கப்படாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலை நடிகர் பவாத் கான் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.