2013ல் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது. 13 வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்திற்கு வழி கிடைக்கும் போது அது போல வெளிவராமல் நிற்கும் மேலும் சில படங்களுக்கு வழி பிறக்குமா என்ற பேச்சும் எழுந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் இன்னும் வெளியீடு காணாமல் காத்திருக்கின்றன.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் சில பல வருடங்களாகவே வெளியீட்டிற்காகத் தவித்து வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, ஷாம், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த ‘பார்ட்டி’, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நடித்த ‘இடம் பொருள் ஏவல்’, ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, ஆகிய படங்களும் அப்படியே முடங்கிப் போய் உள்ளன.’மத கஜ ராஜா’ படத்திற்கு ஒரு வழி பிறந்தது போல, ‘துருவ நட்சத்திரம், நரகாசூரன், பார்ட்டி, இடம் பொருள் ஏவல், சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.