மலையாளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்கோ’. இதனை ஹனீப் அதேனி இயக்க, உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்ததால், படத்துக்கு ஏ (A) சான்று வழங்கப்பட்டது. இருந்தாலும், படம் வெளியானதும் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இப்படம், தனது குடும்பத்தை அழித்த வில்லன் கூட்டத்திற்கெதிராக கொடூரமாக பழிவாங்கும் ஹீரோவின் கதையை விளக்குகிறது. வெளியான போதே, “அதிக வன்முறை காட்சிகள் கொண்ட படம்” என்ற விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, படம் இரண்டு ஓடிடி (OTT) தளங்களில் வெளியானதும், அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்பாகம் வெற்றியடைந்த நிலையில், ‘மார்கோ’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், மார்கோ திரைப்படம் தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தளங்களில் திரையிடப்படுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் மற்றும் அதன் கேரள பிராந்திய அதிகாரி நதீம் துபைல் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.சமீபத்தில், மார்கோ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கேரள முதல்வர் சட்டசபையில் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.