மோகன்லால் நடித்தும், ஜீத்து ஜோசப் இயக்கத்திலும் மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இரண்டு பாகங்களாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது, மூன்றாம் பாகத்தை மலையாளத்துடன் சேர்த்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இதுகுறித்து பேசும்போது, “திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெளியான நிலையில், அதன் கதை ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. எனவே, மலையாளத்தில் மூன்றாம் பாகம் முதலில் வெளிவந்தால், அது ஹிந்தி மற்றும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் கூறுகிறார்கள். மேலும், கதையின் திருப்பங்கள் முன்கூட்டியே வெளிப்படும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம், மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டால், வியாபாரத்தில் தாக்கம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்த விஷயத்தில் எங்களது தயாரிப்பாளர் மற்றும் பிற மொழித் தயாரிப்பாளர்கள் விவாதித்து வருகிறார்கள். இப்போது நாங்கள் படப்பிடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். ரிலீஸ் நேரத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். முடிவு எடுக்கப்படாவிட்டால் வழக்கம்போல மலையாளத்தில் திரிஷ்யம் 3 முதலில் வெளியாகும்,” என்றார். இதற்கிடையில், மலையாளத்தில் உருவாகும் ‘திரிஷ்யம் 3’ படம் தமிழிலும் கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருப்பதால், மூன்று மொழிகளிலும் வியாபார ரீதியாக படம் நிச்சயமாக வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

