மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷை விட சிறந்த தேர்வு யாருமில்லை என அந்தப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார். தனுஷ், இந்த பயோபிக்கில் நடிப்பார் எனும் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத், இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார் என கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய நேர்காணலில் ஓம் ராவத் கூறியதாவது:
“தனுஷ் ஒரு தனிச்சிறப்புடைய நடிகர். இந்தப் படத்தில் அவரை விட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது. அவர் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் எப்போதுமே எதிர்பார்த்தேன்.
எனக்கு வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும்; அது மிகவும் சவாலான வகைமை. எந்த ஆளுமையின் வாழ்க்கையை எடுத்தாலும், அதைத் திரைப்படமாக மாற்றுவது எளிதல்ல. எந்த பகுதிகளைப் படம் எடுக்கிறோம், எதைத் தவிர்க்கிறோம் என்பதும் மிகுந்த முக்கியம். சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டியிருக்கும்; சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதை எவ்வாறு வடிவமைக்கிறோம் என்பதில்தான் படம் சிறப்பாகும்.
உத்வேகம் அளிக்கும் வகையில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும். அப்துல் கலாம் எப்போதுமே இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தவர். என் இளமைப் பருவத்தில் அவருடைய புத்தகங்கள் என் வாழ்க்கையை மாற்றியமைத்தன. நிறைய பேருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும் படமாக இது அமையுமானால், நான் பெருமைப்படுவேன். கலாம், லோகமான்ய திலகரைப் போலவே இளைஞர்களை நம்பியவர்” என அவர் தெரிவித்துள்ளார்.