நடிகர் அஜித்குமார் தற்போது தனது அணியுடன் சேர்ந்து சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்று வருகிறார். இந்த போட்டிகளில் அவர் அணியும் உடைகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) லோகோ இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்களும், ஊடகங்களும் உட்பட பலரின் கவனத்தை ஈர்த்தது. இதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அஜித்குமார் கூறியதாவது: “தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் எனக்கும் என் அணிக்கும் ஒரு பெரிய தூண்டுதலாக இருந்து வருகிறது. உயர்ந்த இலக்குகளை நோக்கி என் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி முழுமையான முயற்சியுடன் பயணிக்கிறது. சென்னையில் கடந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய ‘ஸ்ட்ரீட் ரேஸ்’ போட்டி, என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அதுமட்டுமின்றி தமிழக அரசு பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆதரவிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை என் அணியின் உடைகளில் பயன்படுத்துவதற்காக அரசிடம் நான் அதிகாரப்பூர்வமாக அனுமதி கேட்டுப் பெற்றேன். அவர்கள் எங்களுக்குச் ஸ்பான்சர் செய்யவில்லை; மேலும் நான் ஒருவரிடமும் ஸ்பான்சர்ஷிப் கேட்பதுமில்லை. இந்த விளையாட்டு மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளுக்கும் எஸ்.டி.ஏ.டி பல சிறந்த பணிகளைச் செய்து வருகிறது,” என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.