தமிழ் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சசிகாந்த், தனது ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசுவோம், இறுதி சுற்று, காவியத் தலைவன், விக்ரம் வேதா, கேம் ஓவர், ஜெகமே தந்திரம், பிரம்மயுகம் (மலையாளம்) உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது, இயக்குநராக மாறி “தி டெஸ்ட்” என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளராக பாடகி சக்திஸ்ரீ கோபாலன் பணியாற்றியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.படம் குறித்து சசிகாந்த் அளித்த பேட்டியில், நான் எப்போதுமே இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தேன், ஆனால் தயாரிப்பாளர் ஆகி விட்டேன். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘தி டெஸ்ட்’ என்ற கதையை, இப்போது தான் இயக்க முடிந்தது.

“இது ஒரு கிரிக்கெட் பின்னணியில் அமைந்த படம். குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரு மேட்ச் கதையின் முக்கியமான பகுதியாக உள்ளது. மேலும், சித்தார்த் உட்பட 22 நிஜமான ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் இதில் நடித்துள்ளனர். முக்கிய கிரிக்கெட் காட்சிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டன. கதைப்படி, மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோரின் வாழ்க்கையில் கடினமான காலக்கட்டம் வரும். அந்த நேரத்தில் அவர்கள் எவ்வாறு போராடி வெற்றி பெறுகிறார்கள் என்பதே திரைக்கதை. இந்த படம் ஒரே நாளில் பல கோடி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம்” என்று கூறினார்.