தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படம் பெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர், இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘சிங்கம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில், காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் மூலம் காஜல் அகர்வால் இந்தி ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமாக ‘சிங்கம் ரிட்டன்ஸ்’ என்ற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, தற்போது ‘சிங்கம் அகெய்ன்’ என்ற மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்க, கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்ஷய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராஃப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதன் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதுகுறித்து காஜல் கூறுகையில், “இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது கடினம். நடிகைகளாகிய நாங்கள் அனைவரும் பெரிய ஆவலுடையவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்கிற பேராசை எங்களிடம் உள்ளது,” என்றுள்ளார்.