மலையாள மொழியில் சில திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’, விக்ரமுடன் ‘தங்கலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது கார்த்தியுடன் ‘சர்தார்-2’ படத்திலும், பிரபாஸுடன் ‘ராஜா சாப்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், மலையாள திரையுலகில் மோகன்லால் நடிக்க, பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் ‘ஹிருதயபூர்வம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அந்த படத்தின் லொகேஷன் புகைப்படங்களை மாளவிகா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் மோகன்லாலுடன் இருக்கிற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒரு ரசிகர் அந்தப் படத்தை குறிப்பிட்டு, மோகன்லாலும், மாளவிகா மோகனனும் இடையே உள்ள வயது வித்தியாசத்தை எடுத்துரைத்து, “முதிய நடிகர்கள் தங்களின் வயதுக்கு ஏற்பற்ற கதாபாத்திரங்களில் நடிக்க என்ன காரணம்?” என்கிற வகையில் கருத்து பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த மாளவிகா, “இது ஒரு காதல் படம் என்று யார் சொன்னார்கள்? உங்கள் நிரூபணமற்ற மற்றும் அரைமறையான ஊகங்களால் ஒரு மனிதரையும், ஒரு படத்தையும் மதிப்பீடு செய்வதை நிறுத்துங்கள்” என நறுக்கென்று பதிலளித்துள்ளார். இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.