நடிகர் விஜய்யின் 69வது படமாகவும் கடைசி படமாகவும் கருதப்படும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 69” என்ற பெயரை வைத்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், நரேன், பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற பூஜையில், கேவிஎன் நிறுவனத்தின் நிறுவனர் கே. வெங்கட நாராயணா விஜய்யுடன் பேசிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த கே.வி.என் என்கிற கே. வெங்கட நாராயணா யார்? வெங்கட நாராயணா ஒரு மிகப்பெரும் தொழிலதிபராக இருந்து, 2021ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘சாகத்’ படத்தை தயாரித்து சினிமா தயாரிப்பாளராக தனது முதலடியை எடுத்து வைத்தார். 2022ஆம் ஆண்டு ‘பை டு லவ்’ மற்றும் 2024ஆம் ஆண்டு ‘கேடி தி டெவில்’ ஆகிய படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், அவர் முதன்முறையாக தமிழ் படமொன்றை தயாரிக்க முன்னே வந்துள்ளார். அதோடு, அடுத்ததாக பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021ஆம் ஆண்டில் தயாரிப்பாளராக அறிமுகமான அவர், ஏராளமான படங்களை வாங்கி விநியோகமாகவும் செய்துள்ளார். ‘பொகரு’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘சீதாராமம்’, ‘விக்ராந்த் ரோணா’, ‘777 சார்லி’, ‘கல்கி 2898 ஏடி’ மற்றும் தமிழ் திரைப்படமான ‘கங்குவா’ போன்ற படங்களின் கன்னட உரிமையை வாங்கி வெளியிட உள்ளனர். தளபதி 69 படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா, இதற்கு முன்பு பிரெஸ்டிஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றி வந்தார். அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து, அவரது மனைவி நிஷா வெங்கட் கோனங்கியும் கேவிஎன் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இன்று நடைபெற்ற தளபதி 69 படத்தின் பூஜையிலும் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.