தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான விஜய், தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்க, படத்திற்கு “ஜனநாயகன்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2026ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனால், ரசிகர்கள் படத்தின் அடுத்த அப்டேட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், “ஜனநாயகன்” படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி தொடர்பாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி, நடிகர் விஜய் தனது 51-வது பிறந்த நாளை வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு, அன்று முதல் பாடல் வெளியிடப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.