96′ படம் மூலம் அனைவரின் பள்ளிப் பருவக் காதலை மீண்டும் நினைவுப்படுத்தியவர் இயக்குனர் பிரேம் குமார். இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பது ராம், ஜானு கதாபாத்திரங்களை அனைவருக்கும் அறிமுகம் செய்ததின் விளைவு. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ‘மெய்யழகன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதுவும், முதல் படத்தின் போலவே, அனைவருக்கும் பிடிக்கும் ‘பீல் குட்’ படமாக அமைந்துள்ளது.
கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தியை ஆழமாகத் தழுவி பாராட்டியுள்ளார்.

இதைப் பற்றி கார்த்தி கூறுகையில், “‘மெய்யழகன்’ படத்தை பார்த்து வந்த அண்ணன் சூர்யா, நான் சாப்பிட்டு கொண்டிருந்தபோது என்னை எழுந்து நிற்கச் சொல்லி, கட்டியணைத்து பாராட்டினார். கடைசியாக அவர் ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு இவ்வாறு செய்தார். தற்போது ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்ததும் மீண்டும் இதேபோல் செய்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படம் சூர்யாவைப் போலவே, ப்ரீவியூ காட்சிகளைப் பார்த்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி கவர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.