சசிகுமார் நடித்து வரும் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதில் அவருக்கு மனைவியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோ சார்பில் யுவராஜ் கணேசன் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மென்ட் சார்பில் மகேஷ் ராஜ் தயாரிக்கின்றனர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் அபிஷன் ஜீவந்த் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சசிகுமார் இரண்டு மகன்களின் தந்தையாக நடிக்கிறார். அந்த மகன்களின் கதாபாத்திரங்களில் மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப் படமான ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த மிதுன் மற்றும் கமலேஷ் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றிப் பேசும் போது, சசிகுமார் கூறியதாவது, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து சென்னை வந்த ஒரு ஈழத் தமிழர் குடும்பம், அங்கு முழு சமூகத்தாலும் விரும்பப்படும் ஒரு குடும்பமாக எப்படி மாறுகிறது என்பதே படத்தின் மையக்கதை என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசும்போது, அவர்கள் சந்தித்த வலியும் கஷ்டங்களுமே முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்தக் கதையில், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை எவ்வாறு சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதையே நம் முன் கொண்டு வந்திருக்கிறோம். இந்தக் கதையின் மையக்கருத்தே, 16 வயது இளைஞனும் ஒரு சிறிய பிள்ளையும் தந்தையால் எப்படி வழிநடத்தப்படுகிறார்கள் என்பதிலேயே மையமாக உள்ளது. இதனை கதையாக சொல்லும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
இந்தக் கதையை வேறு எந்த நடிகரிடமும் சொல்ல முடியாது. இதில் நானே நடிக்க வேண்டும் என்பதற்கு உறுதியாக இருந்தேன். தற்போதைய தமிழ் சினிமாவில் 16 வயது மகனுக்கு அப்பாவாக நடிக்கக் கூடிய நடிகர்கள் இருவரோ மூவரோ தான் இருக்கிறார்கள். அவர்களும் 25 வயது மகனைக் கொண்ட கதாபாத்திரத்தையே ஏற்கிறார்கள். ஆனால் அப்பா கதாபாத்திரமாக நடிக்க விரும்புவதில்லை. இந்தக் கதையும் முதலில் சில ஹீரோக்களுக்கு சொல்லப்பட்டது. அவர்கள் மறுக்க, பிறகு என்னிடம் வந்தது. நான் நடிக்கத் தயார் என்று உடனே சம்மதித்தேன். இங்கு முக்கியமானது கதையே. சமீபகாலமாக, அழகாக சொல்லப்பட்ட முறையில் முழுத் திருப்தியளித்த கதை இதுவே என்று சசிகுமார் கூறியுள்ளார்.