ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ஹாரர் காமெடி திரைப்படம் ‘காஞ்சனா’ இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அதன் நான்காம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகை நோரா பதேகி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் மற்றும் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமசந்திரா ராஜூ வில்லனாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது லாரன்ஸ் நடிக்கும் மற்றொரு படமான ‘பென்ஸ்’ படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு துவங்கியதால், ‘காஞ்சனா 4’ படப்பிடிப்பில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன், இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடைபெற்றது. தற்போது வரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் புதுச்சேரியில் துவங்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.