லப்பர்பந்து வெற்றிக்கு பிறகு, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தண்டகாரண்யம். இதை அதியன் ஆதிரை இயக்குகிறார். இதில் தினேஷ், கலையரசன், ரித்விகா, யுவன் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 19 அன்று திரைக்கு வருகிறது.

தண்டகாரண்யம் என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் அடர்ந்த காட்டுப் பகுதியைக் குறிக்கும் பெயர். “தண்டம்” (தண்டனை) மற்றும் “ஆரண்யம்” (காடு) என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து “தண்டனைக்குரியவர்கள் வாழும் காடு” என்பதே அதன் பொருள்.
ராமாயணத்தில், ராமர், சீதை, இலக்குவன் ஆகியோர் வனவாசத்தின் போது இந்த தண்டகாரண்யத்தில் தங்கியதாகவும், அங்கு ராட்சசர்கள் வசித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதற்கு தண்டனைக்குரியவர்களின் காடு என்று பெயர் கிடைத்ததாகக் கருதப்படுகிறது. இன்றைய காலத்தில், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் பரந்து விரிந்துள்ள பெரிய வனப்பகுதிதான் தண்டகாரண்யம்.இந்தக் கதைக்கும், உருவாகும் இந்தப் படக் கதைக்கும் எந்த வகையில் தொடர்பு இருக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை. கடைசியாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.