அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலித்தது. மேலும், உலகளவில் 50 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் வந்துள்ளன.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, படம் அரை அளவுக்கே வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. வேலை நாள் என்பதாலேயே அன்றைய வசூல் குறைந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை, நேற்று விடுமுறை நாள் என்பதால் வசூல் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று வந்த வசூலைக் கொண்டு, ‘குட் பேட் அக்லி’ படம் உலகளவில் 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால், மேலும் 50 கோடி வசூலாவது உறுதி எனக் கூறப்படுகிறது. எனவே, நாளைய நாள் முடிவில் இந்த படம் 150 கோடி வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் மூன்று நாட்கள் வேலை நாட்கள் என்பதால் வசூல் குறைவாக இருக்கலாம். அதன் பிறகு மூன்று விடுமுறை நாட்கள் வருவதால் மீண்டும் வசூலில் அதிகரிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அடுத்த வார முடிவில் படம் 200 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.